Thursday, July 16, 2020

தமிழரின் தாவர வழக்காறுகள் ஆ.சிவசுப்பிரமணியன்


படிப்பறை
படிப்பறை
தமிழரின் தாவர வழக்காறுகள் ஆ.சிவசுப்பிரமணியன்

தாவரங்களுடனான தமிழர் வாழ்வும் அறிவும் எவ்வளவு ஆழமானது நுட்ப மானது என்பதற்கான ஆதாரங்களாக ‘சங்க இலக்கியமும்’ ‘தொல்காப்பியமும்’ நம்மிடையே நிலைத்திருக்கின்றன. பூக்களின் பெயரால் பகுக்கப்பட்ட திணைமரபு தொடங்கி, மூவேந்தர்களும் போருக்குச் சூடிச் செல்லும் பூக்கள் வரை இதன் அழகியலும் தொன்மமும் விரிவானது. தமிழில் தாவரங்கள் சார்ந்து எழுதப்பட்ட முக்கியமான நூல் கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்.’ அதன் தொடர்ச்சியாக நூல்கள் வெளிவராத சூழலில், ‘பனைமரமே பனைமரமே’ எனும் நூலை எழுதினார் ஆ.சிவசுப்பிரமணியன். பனைமரம் குறித்த பன்முகப் பார்வைகொண்ட நூல் அது. அதைத் தொடர்ந்து, சமூக நோக்கு மற்றும் பொருள்சார் பண்பாட்டு ஆய்வு நோக்கில் தாவரங்கள் குறித்த அவரது இந்த இரண்டாவது நூல் வெளியாகியிருக்கிறது.
நொச்சி, ஆவாரை, மஞ்சணத்தி, எருக்கு, ஆமணக்கு, எள், ஓட்டப்பிடாரம் கத்திரிக்காய், பருத்தி, பெருமரம் (அயல்தாவரம்) உள்ளிட்டவை மக்களின் உணவு, மருத்துவம், பொருளாதாரம், பண்பாடு, அன்றாட வாழ்வியல் போன்றவற்றில் எவ்வாறு கலந்துள்ளன... சமூக வரலாற்றில் அவை எவ்வித பாதிப்புகளை, மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பேசுகிறது நூலிலுள்ள 11 கட்டுரைகள். இத்தாவரங்களிலிருந்து உருவாக்கப்படும் பல்வேறு பயன்பாட்டுப் பொருள்கள் பற்றிய ‘விளக்குமாறாகும் தாவரங்கள்’, ‘தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய்’ என்ற இரண்டு கட்டுரைகளின் அணுகுமுறை சிறப்பானது.
தமிழரின் தாவர வழக்காறுகள் ஆ.சிவசுப்பிரமணியன்
ஆங்கில அரசின் கட்டாய அவுரிப் பயிரிடலுக்கு எதிராக காந்தியின் போராட்டம், கரும்பு உற்பத்தியுடன் தொடர்புடைய புலம்பெயர்ந்தோர் மற்றும் அடிமைகள் வணிகம் எனப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளுடன் தாவரங்கள் தொடர்பான மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், வாய்மொழிப் பாடல்கள், கதைகள் என ஏராளமான விஷயங்கள் கட்டுரைகளில் ஊடிழையாகப் பின்னப்பட்டுள்ளன.
படிப்பறை
பருத்தி, கரும்பு போன்றவற்றால் உருவான தொழிற்சாலைகள், மின்சாரம், புதிய எந்திரங்கள் மற்றும் ரயில்களின் வரவு உள்ளிட்டவையால் விளைந்த புதிய பொருளாதாரம் குறித்த பதிவு முக்கியமானது. அது சமூக உயர்வுக்கான ‘பண்பாட்டு அடையாளப் போராட்டங்களுக்கு’ தூண்டுகோலாக அமைந்தவிதம் குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் வரவேண்டும். தாவரங்கள்மீது ஏற்றப்படும் மேன்மை இழிவு குறித்த கருத்தாக்கங்கள் குறித்தும் புதிய ஆய்வுகள் வரவேண்டும். இந்நூல் அவற்றுக்கான திறப்புகளைத் தருகிறது.
தமிழரின் தாவர வழக்காறுகள் ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: உயிர் பதிப்பகம்
எண்.4, 5வது தெரு, சக்தி கணபதி நகர், திருவொற்றியூர், சென்னை - 600 019. பக்கங்கள்: 222 விலை: ரூ.210